தென் தமிழகத்தில் ஐ.டி தொழில் துறை : கேள்வி – பதில் (Translation of my Interview to The New Indian Express, Chennai Edition)

By R.Sivarajah President – SIDA / JMD – Winways Systems Private Limited


தென் தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி பற்றி உங்கள் கருத்து என்ன?
முதலில் ஒட்டு மொத்த இந்தியாவின் ஐ.டி துறை வளர்ச்சிப் பாதை பற்றி ஒரு சுருக்கமான விளக்கம். இந்தியாவில் எண்பதுகளில் துளிர் விடத் தொடங்கிய தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியானது தொன்னூறுகளில்  வேர் விட்டு கிளை பரப்பி ஆழ விருட்சமாய் வளந்தது. முக்கியமாக தென்னிந்தியாவில் பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் போன்ற பெரு நகரங்கள் இத் துறையின் பெறும் பயன்களைப் பெற்றன. இந்திய ஐ.டி தொழில் துறை இரண்டாயிரமாவது வருடத்தில் \’டாட் காம் பஸ்ட்\’ (dot com bust) என்று  சொல்லப்படும் பிரச்சினையால் பெறும் பின்னடைவை சந்தித்தது. அதாவது இணைய சேவைகளுக்கான அடிப்படை கட்டமைப்புகளும், தொழில் நுட்பங்களும் மற்றும் பயனீட்டாளர்களின் எண்ணிக்கையும் அனுகூலமற்ற ஒரு கால கட்டத்தில் பல்வேறு இணையம் சார்ந்த சேவைகள் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஏராளமான பணம் முதலீடு செய்யப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேய இந்த முயற்சிகள் பெறும் தோல்வியை சந்தித்தன. அதன் பின்பு ஓரிரு வருடங்களில் பல்வேறு சேவைத்துறை சார்ந்த வெளிநாட்டு வியாபார வாய்ப்புகள் குவியத் தொடங்கி விட்டன. 2008 ஆம் ஆண்டு வரை சீரான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்திய ஐ.டி துறையின் வளர்ச்சி அதன் பின்பு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார தேக்க நிலையின் காரணமாக மீண்டும் பெறும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. கடந்த சில மாதங்களாக இந்த நிலைமை ஓரளவு சீரடைந்து வருவதாக புள்ளி விபரங்களும் வல்லுநர் கூற்றுக்களும் தெரிவிக்கின்றன.

மதுரை மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஆரம்பத்திலிருந்தே இந்திய ஐ.டி தொழில் துறையில் ஏற்பட்ட புரட்சி வெள்ளத்த்தின் எச்ச மிச்சங்கள் கூட கிடைக்க வில்லை என்பது நிதர்சனமான உண்மை. 2002 ஆம் ஆண்டு மிகச் சிறிய அளவில் ஹனிவெல் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பிரிவு ஒன்று தியாகராசர் பொறியியல் கல்லூரியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தனது சேவையை ஆரம்பித்தது. இந்த நிறுவனம் பின்னர் பல நிலைகளில் விரிவாக்கம் செய்து இப்போது  500 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் செயல் படுகின்றது. இது தவிர வேறு எந்த பன்னாட்டு நிறுவனமோ அல்லது இந்தியாவின் பெரு நிறுவங்களோ இன்று வரை தென் தமிழகத்தில் அடி எடுத்து வைக்க வில்லை.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் இளைஞ்ர்களால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மற்றும்  நடுத்தர நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு  குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி பெற்றுள்ளது ஆறுதலான விஷயம். இதே போன்று சிவகாசி, விருது நகர், தூத்துக்குடி, நெல்லை, நகர் கோயில் போன்ற ஊர்களிலும் சில சிறு நிறுவங்கள் செயல்பட்டு  வருவதும் குறிப்பிடத்தக்கது. 2009-10 ஆம் ஆண்டிற்கான அதிகாரபூர்வ ஏற்றுமதி புள்ளி விவரங்களின் படி தமிழகத்தின் மொத்த மென்பொருள் ஏற்றுமதி இந்திய ரூபாயில் சுமார் 37 ஆயிரம் கோடி. இதில் சென்னை தவிர்த்த பிற தமிழக நகரங்களின் மொத்த பங்கு சுமார் 900 கோடி, இதில் மதுரையின் பங்கு வெறும் 28 கோடி தான்.  இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் மொத்த ஏற்றுமதி வருவாயில் இது 3% மட்டுமே.

உள்ளூர் சிறு நிறுவங்களின் பங்களிப்பு எந்த அளவில் உள்ளது? 
பொதுவாக மதுரையில் ஹனிவெல் என்ற பன்னாட்டு நிறுவனம்  தவிர வேறு எந்த மென்பொருள் சேவை நிறுவனமும் இல்லை என்ற தவறான கருத்து தான் பொது  மக்கள் மத்தியில் நிலவுகின்றது.  அடுத்து இங்கு செயல் படும் நிறுவங்களை பற்றிய முழுமையான புரிதல் ஐ.டி மாணவர்களுக்கோ, கல்லூரி ஆசிரியர்களுக்கோ அல்லது பெற்றோர்களுக்கோ இல்லை என்பது தான் துரதிர்ஷ்டமான நிலை.
இதன் காரணமாக ஐ.டி துறை வேலை வாய்ப்புகளுக்காக பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்குத் தான் போக வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களில் பல தரமான தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளூர் தொழில் முனைவோரால் உருவாக்கப் பட்டுள்ளன. இவற்றில் சில 100% ஏற்றுமதி செய்பவை. இந்திய ரயில்வே, ராஷ்ட்ரபதி பவன், இந்தியன் இன்ஸ்டிடியுட் ஆப் சயின்ஸ் போன்ற நாட்டின் மிக உயரிய நிருவங்களுக்கான சேவைகளை மதுரையை சார்ந்த நிறுவனங்களே வழங்குகின்றன என்பது பெருமை கொள்ளக் கூடிய விஷயம். மொபைல் போன்களுக்கான மென்பொருள் நிரல்களை உருவாக்குவதில் நாட்டிலேயே முதன்மையான நிறுவனம் மதுரையை தலைமை இடமாக கொண்டிருப்பது பலருக்கு தெரியாத உண்மை. பெரிய கோவில்களின் நிர்வாக முறை வழக்கமான தொண்டு நிறுவனங்கள் போலன்றி பெரிதும் மாறுபட்டிருக்கும். மதுரை மீனாட்ச் கோவில் மட்டுமல்லாது வேறு பல புகழ் பெற்ற கோவில்களுக்கான மென்பொருள் சேவைகளை வழங்கும் நிறுவனமும் மதுரையில்  இருந்து தான் இயங்குகிறது. அண்மையில் \’எக்கனாமிக் டைம்ஸ்\’ நாளிதழ் தனது நாடளாவிய பதிப்பு ஒன்றில் மதுரை மீனாட்சி திருக்கோயில் இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்தை சிறப்பாக பயன் படுத்தும் நான்கு கோவில்களில்  ஒன்றாக எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒப்பன் சோர்ஸ் என்று சொல்லப்படும் கட்டற்ற மென்பொருள் பயிற்ச்சி மற்றும் உருவாக்கத்தில் தென் இந்தியாவின் முதன்மை நிறுவனங்களில் ஒன்றும்மதுரையை  தலைமையிடமாகக் கொண்டே இயங்கி வருகின்றது.
இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை மட்டுமல்லாது பல வெளிநாட்டுப் பங்கு சந்தைகளுக்கும், பங்குச்சந்தை சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு தேவையான சிறப்பு மென்பொருள்களை வழங்கும் நிறுவனமும்  மதுரையில் வெகு  வேகமாக வளர்த்து வருகின்றது. இந்த நிறுவனம் விரைவில் தொடங்கப்படவிருக்கும்  தமிழக அரசின் ஐ.டி பூங்காவிலும் தனது விரிவாக்க முதலீடுகளை செய்வதற்கான அனுமதியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர  அமெரிக்காவின் கலிபோர்னிய மாநில அரசு உட்பட பல நாடுகளின் மென்பொருள் மற்றும் இணைய சேவைகளை செய்யும் பல நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன.

இத்தகைய நுட்பமான சேவைகளை வழங்கும் நிறுவங்கள் இருந்தும் ஏன் ஐ.டி துறை வளர்ச்சி இந்தப் பகுதியில் குறிப்பிடத்தகுந்த அளவு இல்லை? 

இத்தகைய தனித்தன்மை வாய்ந்த சேவைகளை அளிக்கக் கூடிய நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவிலேயே இயங்குகின்றன. மற்ற பல நிறுவனங்கள் இணையதள வடிவமைப்பு சேவைகளை மட்டுமே தங்களது முக்கிய பணியாகக்கொண்டு இயங்குகின்றன. இத்தகைய  சிறு நிறுவனங்களுக்கு இந்தப் பிராந்தியத்திற்கே  உரிய ஏராளமான வளர்ச்சித் தடைகளும் இருக்கின்றன. தென் மாவட்டங்களில் பொதுவான தொழில் வளர்ச்சியும் மிக பின் தங்கி இருப்பதால் உள்ளூர் சந்தை வாய்ப்புகளை மட்டுமே நம்பி ஒரு ஐ.டி நிறுவனத்தை வளர்க்க முடிவதில்லை. ஏற்கனவே கூறியது போல் ஏற்றுமதி வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு தொழில் நடத்தும் இந்திய அளவிலான பெரு நிறுவனங்களோ அல்லது பன்னாட்டு நிறுவங்களோ பல்வேறு காரணங்களால் இங்கு முதலீடு செய்ய முன் வருவதில்லை.

அத்தகைய வளர்சித்தடைகளுக்கான காரணங்கள் யாவை?
ஐ.டி தொழில் துறை முதலீடுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். பன்னாட்டு நிறுவங்களின் நேரடி மட்டும் கூட்டு  முதலீடுகள், இந்திய பெரு நிறுவனங்களின் விரிவாக முதலீடுகள் மற்றும் உள்ளூர் தொழில் முனைவோர்களால் செய்யப்படும் முதலீடுகள். ஐ.டி துறை  புரட்சியின் ஆரம்ப கால கட்டங்களில் பன்னாட்டு மற்றும் இந்திய பெரு நிறுவன முதலீடுகளை கவர்வதற்கு எந்த ஆக்க பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை. சென்னை கோவை  போன்று தானாகவே கவரப் படுவதற்கான அம்சங்களும்  மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இல்லை. எனவே ஆரம்ப கால அபரிமிதமான வளர்ச்சி வாய்ப்புகளை நாம் தவற விட்டு விட்டோம்.  அக்காலகட்டத்தில் ஐ.டி துறையில் ஆர்வமிருந்த  பல உள்ளூர் தொழில் முனைவோரும் இந்தப் பகுதியில் நிலவிய சாதகமற்ற தொழில் சூழ்நிலைகள் மற்றும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் தாங்கள் முயற்சிகளை சென்னை, பெங்களுரு போன்ற நகரங்களில் தொடங்கினார்கள். சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் தொடங்கப்பட்ட ஹனிவெல் நிறுவனம் தான் இந்தப் பிராந்தியத்தில் சொல்லிக்கொள்ளக் கூடிய வெளி வரவு. துரதிர்ஷ்ட வசமாக அதன் பின்னரும் பெரிய நிறுவனங்களின் விரிவாக்க முயற்சிகள் தென் மாவட்டங்களில் தொடங்கப்படவில்லை. இத்தகைய பின்னடைவுகளுக்கு காரணங்களாக அடிப்படை கட்டமைப்பு வசதிக் குறைபாடுகள் மற்றும் பெரு நகரங்களைப் போன்ற மேற்கத்திய கலாச்சார அடிப்படையிலான பொழுது போக்கு வசதிகள் இல்லாமை, அதிவேக முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகள் இல்லாமை போன்றவை கூறப்படுகின்றன. தமிழ் திரைப்படங்களிலும் வெகுஜன ஊடகங்களிலும் பெரும்பாலும் எதிர் மறையாக சித்தரிக்கப் படும் தென் மாவட்டங்களின் வன்முறைக்கலாச்சாரமும் ஒரு குறிப்பிடத்தக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களின் ஐ.டி மனித வளம் எப்படி உள்ளது?
ஐ.டி மனித வளத்தைப் பொறுத்த வரை தென்னிந்தியாவின் மிக முக்கியமான வழங்கல்  தளமாக தென் தமிழகம் விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது. சென்னை, பெங்களுரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் பணி புரியும் மொத்த ஐ.டி திறனாளிகளில் ஏறத்தாழ 25% பேர்கள் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மதுரையில் இயங்கும் பன்னாட்டு நிறுவனம் தங்கள் கிளை அமைப்பை இங்கு நிறுவியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். ஆனால் நமது மாவட்டங்களில் இருந்து வெளிவரும் மாணவர்களின் \’உடனடி  வேலைத்திறன்\’ குறைவாகவே உள்ளது. அதாவது அவர்கள் தங்கள் பாடங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாலும் படித்து முடித்தவுடன் பணியில் அமரக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பங்களை பிரயோகிக்கும் திறன் மற்றும் மென் திறன்களில் பின் தங்கியே இருகின்றார்கள்.

தென் தமிழகத்தில் ஐ.டி துறையை முனேற்ற என்ன நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன?
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாகவே இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), மடீட்சியா, சேம்பர்   போன்ற அமைப்புகள் ஐ.டி துறை முன்னேற்றத்திற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றன. அண்மையில் தான் தென் தமிழகத்தில் இயங்கும் ஐ.டி சேவை நிறுவனங்களுக்கான தனியான ஒரு சங்கம்  மென்பொருள் நிறுவனங்களின் முன்னேற்ற சங்கம் (Software Industries Development Association (SIDA)) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.

அரசின் சார்பில் மதுரையில் ஐ.டி பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் விளைவாக 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு மதுரை  மட்டுமல்லாது பல்வேறு நகரங்களிலும் ஐ.டி பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. தென் மாவட்டங்களில் மதுரையில்  இரண்டும் நெல்லையில் ஒரு பூங்காவும் அறிவிக்கப்பட்டன.  இதில் மதுரை இலந்தைக்குளம் மற்றும் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள ஐ.டி பூங்காக்கள் சில மதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டங்கள் இடையில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார சிக்கலின் காரணமாக பெறும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. தங்கள் நிறுவங்களை இங்கே அமைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்த பல பெரிய நிறுவனங்கள் பின் வாங்கின. சத்யம் நிறுவனம் மிகப்பெரிய அளவில் தனது விரிவாக்கத்தை  மதுரையில் செயல் படுத்த ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட ஊழல் காரணமாக அதுவும் நடைபெறவில்லை. இந்த ஐ.டி பார்க் திட்டத்தின் காரணமாக மதுரையில் இட மதிப்புகள் பெருமளவு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அரசின் ஐ.டி பூங்காக்கள் தவிர ஓரிரு தனியார் பூங்காக்களுக்கான வேலையும் ஆரம்பிக்கப் பட்டது. சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளின் முன்னேற்றத்தைப் பொறுத்து பெரு நிறுவனங்கள் இவற்றில் தாங்கள் விரிவாக்க முயற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது. தற்போதைக்கு ஒரு  சில நிறுவங்கள் மட்டுமே தாங்கள் தேவையை உறுதி செய்துள்ளன. தேர்தல் முடிவுக்குப் பின்னர் அமையவிருக்கும் புதிய அரசின் முயற்சிகளை பொருத்தும் இந்த பூங்காக்களின் வெற்றி உள்ளது. ஐ.டி பூங்காக்களைப் பற்றி முக்கியமாக சொல்லப் பட வேண்டிய விஷயம், இங்கே அதிகளவில் ஏற்றுமதி செய்யக்கூடிய ஓரளவு பெரிய நிறுவனங்கள் மட்டுமே இயங்கக்கூடிய வகையில் தான் அரசின் சட்ட திட்டங்கள் உள்ளன.சிறு  நிறுவனங்கள் தற்போது உள்ள ஐ.டி பூங்காக்களில் இடம் பெறுவது சாத்தியமானதாக இல்லை.

தென் தமிழக ஐ.டி நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டுள்ள சிடா அமைப்பின் நோக்கங்கள் என்ன?
சிடாவின் முக்கியமான நோக்கங்கள் இந்தப் பகுதியில் இயங்கும் சிறிய ஐ.டி நிறுவனங்களில் வளர்ச்சிக்கு உதவுவதேயாகும்.இந்த நிறுவனங்களின்  முக்கிய பிரச்சினைகளாக விரிவாக்க முதலீட்டு தேவைகள், சந்தைப் படுத்துதல், தொழில் நுட்பத்திறன் மேம்பாடு, மனித வள மேம்பாடு, முன்னேற்றத்துக்கு உதவும் தகவல் அறியும் வாய்ப்புகள், வல்லுநர் தொடர்புகள், வியாபாரத் தொடர்புகள், உலகத்தர மேம்பாடு போன்ற மேலும் பல விஷயங்கள் உள்ளன. இத்தகைய பிரச்சனைகளை சரியான வல்லுனர்கள் மூலமாகவும் ஆக்கபூர்வமான திட்டங்கள் மூலமாகவும் நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர பெரிய முதலீடுகளை பெறுவதற்கும் இப்பகுதியின் மாணவர் சமுகத்தின் வளத்தை மேம்படுத்துவதற்கும் சிடா ஆணித்தரமாக செயல்படும். மேற்குறிப்பிட்ட முயற்சிகள் அனைத்தும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) மற்றும் நாஸ்காம் போன்ற நாடளாவிய அமைப்புகளுடனும் மடீட்சியா போன்ற சிறு தொழில் முன்னேற்றத்திற்காக பாடு படும் அமைப்புகளுடனும் இணைந்து மேற்கொள்ளப்படும்.

தென் மாவட்டங்களில் ஐ.டி தொழில்  துறை வளர்ச்சிக்கு அரசின் கொள்கைகள் சாதகமாக இருக்கின்றதா?

இன்று வரை மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஐ.டி கொள்கைகள் அனைத்தும் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு தீட்டப் பட்டுள்ளன. இன்றைய நிலமையை கருத்தில் கொண்டு பார்த்தோமானால் மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் ஐ.டி தொழில் வளர்ச்சி பெருமளவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சார்ந்தே இருக்கும் என்று கணிக்கலாம். இந்திய ஐ.டி துறையை பொறுத்த வரை சிறு நிறுவனங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய ஐ.டி கொள்கைகள் தயாரிக்கப் பட வேண்டும். இது வரை அந்நிய செலாவணி வரவு மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஐ.டி தொழில் கொள்கைகள் வரையப்பட்டன. வரும் காலங்களில் இந்திய சந்தையை குறி வைத்து இயங்கும் சிறு நிறுவனங்கள், குறைந்த அளவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் குறைந்த முதலீட்டில் தனித்தன்மை வாய்ந்த மென்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு துணை புரியும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகள் தீட்டப்பட  வேண்டும். சிறு நிறுவனங்களின் பாது காப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான திட்டங்களை கொண்டு வரவேண்டும். மதுரை போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் \’கிளஸ்டர்\’ என்று சொல்லப்படும் தொழில் கூட்டு அமைப்புகளை நிறுவ தகவல் தொழில் துறையில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களின் முயற்சிகளுக்கு முன்னுரிமையும் சலுகைகளும் தரப்பட வேண்டும். அதே போல் பிணையம் இல்லா கடன் திட்டங்களை ஆக்கபூர்வமாக செயல் படுத்தும் அணுகுமுறை உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டும். அரசாங்க அமைப்புகளின் மென்பொருள்  தேவைகளுக்கு பிராந்திய நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.